சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.99 திருநாகேச்சரம்
பண் - பஞ்சமம்
பிறையணி வாணு தலாள்உமை யாளவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சனுங் கநீல மால்விடம் உண்டதென்னே
குறையணி குல்லைமுல் லைஅளைந் துகுளிர் மாதவிமேற்
சிறையணி வண்டுகள் சேர்திரு நாகேச் சரத்தானே.
1
அருந்தவ மாமுனி வர்க்கரு ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்தற மேபுரி தற்கியல் பாகிய தென்னைகொலாங்
குருந்தய லேகுர வம்மர வின்னெயி றேற்றரும்பச்
செருந்திசெம் பொன்மல ருந்திரு நாகேச் சரத்தானே.
2
பாலன தாருயிர் மேற்பரி யாது பகைத்தெழுந்த
காலனை வீடுவித் துக்கருத் தாக்கிய தென்னைகொலாங்
கோல மலர்க்குவ ளைக்கழு நீர்வயல் சூழ்கிடங்கிற
சேலொடு வாளைகள் பாய்திரு நாகேச் சரத்தானே.
3
குன்ற மலைக்கும ரிகொடி யேரிடை யாள்வெருவ
வென்றி மதகரி யின்னுரி போர்த்தது மென்னைகொலாம்
முன்றில் இளங்கமு கின்முது பாளை மதுவளைந்து
தென்றல் புகுந்துல வுந்திரு நாகேச் சரத்தானே.
4
அரைவிரி கோவணத் தோடர வார்த்தொரு நான்மறைநூல்
உரைபெரு கவ்வுரைத் தன்று உகந்தருள் செய்ததென்னே
வரைதரு மாமணி யும்வரைச் சந்தகி லோடுமுந்தித்
திரைபொரு தண்பழ னத்திரு நாகேச் சரத்தானே.
5
தங்கிய மாதவத் தின்றழல் வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலி யுஞ்செழு மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந் துபிளந் தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழ னித்திரு நாகேச் சரத்தானே.
6
நின்றவிம் மாதவத் தையொழிப் பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விழித்தலென்னே
பங்கய மாமலர் மேன்மது வுண்டுவண் தேன்முரலச்
செங்கயல் பாய்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
7
வரியர நாண தாகமா மேரு வில்லதாக
அரியன முப்புரங் கள்ளவை யாரழ லூட்டலென்னே
விரிதரு மல்லிகை யும்மலர்ச் சண்பக மும்மளைந்து
திரிதரு வண்டுபண் செய்திரு நாகேச் சரத்தானே.
8
அங்கியல் யோகுதன் னையழிப் பான்சென் றணைந்துமிகப்
பொங்கிய பூங்கணை வேள்பொடி யாக விரித்தலென்னே
பங்கய மாமலர் மேல்மது வுண்டுபண் வண்டறையச்
செங்கயல் நின்றுக ளுந்திரு நாகேச் சரத்தானே.
9
குண்டரைக் கூறையின் றித்திரி யுஞ்சமண் சாக்கியப்பேய்
மிண்டரைக் கண்டதன் மைவிர வாகிய தென்னைகொலோ
தொண்டிரைத் துவணங் கித்தொழில் பூண்டடி யார்பரவுந்
தெண்டிரைத் தண்வயல் சூழ்திரு நாகேச் சரத்தானே.
10
கொங்கணை வண்டரற் றக்குயி லும்மயி லும்பயிலுந்
தெங்கணை பூம்பொழில் சூழ்திரு நாகேச் சரத்தானை
வங்கம் மலிகடல் சூழ்வயல் நாவலா ரூரன்சொன்ன
பங்கமில் பாடல்வல் லாரவர் தம்வினை பற்றறுமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com